11. கூவத்தில் படகு சவாரி


எல்லோரும் ஏதாவது ஒரு செயலுக்கு முன் கனவு காண்கிறார்கள். சும்மா இருக்கும் எனக்கும் ஒரு பகல் கனவு தோன்றியது. அதை உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்.

சிங்காரச் சென்னையிலே ஓடும் கூவம் ஆறில் படகிலே சவாரி செய்கிறேன். மாசுப்பற்ற கூவத்தில் அல்ல. தெளிவான தண்ணீரோடு தாமரை, அல்லி போன்ற மலர்களுடன் ஓடும் கூவத்தில் தான். அது மட்டுமா. கூவம் நதியோடு இருக்கும் வீடுகளின் பின் புறத்தில் மக்கள் நதியில் நீராடி மகிழ்கிறார்கள். வெயில் காலம் அல்லவா. படகிலே பிரயாணம் செய்யும் போது, எத்தனை உணவகங்கள் "கூவம் ரிவர் வ்யூ" (Koovam River View) மற்றும் "கூவம் கட்லெரி" (Koovam Cutlery) என்றெல்லாம் இருக்கின்றன. மக்கள் நாள் முழுவதும் உழைத்து, இந்த மாதிரி உணவகங்களில், இரவு சிறிது நேரம் கூவத்திலே வீசும் தென்றலோடு (சந்தன மணம்) அருஞ்சுவை உணவையும் உண்டு மகிழ்கிறார்கள். இந்த படத்தில், இடப்பக்கம் இருப்பது அடையாறு, அடுத்து இருப்பது கூவம் (படத்தை சொடுக்கவும், விரிவான படம் பார்க்கலாம்).

"கூவம் கூவம் சென்னையின் ஆறு கூவம் கூவம்...குக் குக் குக் குக்...." என்று மனதிலே பாப் பாடல் வேறு பாடிக் கொண்டு செல்கிறேன் :) . இந்த கனவு பலிக்குமா?? எனக்கு மறு பிறவிகளில் நம்பிக்கை இல்லை. இந்த பிறவியிலேயே இந்த கனவு பலித்தால் எவ்வளவு பாக்யசாலி ஆவேன் நான் :).
DC Potomac river
யு.எஸ்.ஏ வில் உள்ள வாஷிங்டன் டி.சி, மேரிலாண்ட் மற்றும் விர்ஜீனியா ஆகிய மூன்று மாநிலங்களிலும் போட்டோமாக் (Potomac) என்று ஒரு ஆறு ஓடுகிறது. இந்த ஆறில் தண்ணீர் தெளிவாகத் தான் ஓடும். இந்த நதியில் 1930 இல் இந்த மூன்று மாநிலங்களின் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கப் பட்டது. பின்பு, விஞ்ஞானம் வளர்ச்சி அடைய, சாக்கடை கழிவு நீரை நிறைய சிகிச்சைகளுக்கும் செய்முறைகளுக்கும் அறிமுகப்படுத்தி, மாசுத் தன்மையை குறைத்து பின் நதியிலே கலக்குகிறார்கள். போடோமகாவது பரவாயில்லை.

லண்டனிலே ஓடும் தேம்ஸ் நதியில் இன்னமும் கூட நேரடியாக சாக்கடை கலக்கப்படுகிறது.

சென்னை மாநகரிலே இரண்டு ஆறுகள் ஓடுகின்றது. அடையாறு மற்றும் கூவம். சில தொழிற்சாலைகளின் கழிவு நீர் கூவத்திலே நேரடியாக கலக்கப் படுகின்றது.

சாக்கடை கழிவு நீர் சிகிச்சைப் படுத்தும் மயங்கள் (Sewage Treatment Plants) சென்னையில் நெசப்பாக்கம், கோயம்பேடு, வில்லிவாக்கம், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் இருக்கின்றன. சுமார் 267 எம் எல் டி (mld) கழிவு நீர் இந்த இடங்களில் "Primary treatment and Secondary treatment" ஆகிய சிகிச்சைகளால் பதப் படுத்தப்படுகிறது. இவ்வாறு சிகிச்சைப் படுத்தியும், கூவம் நீர் எவ்வளவு அழுக்கு எவ்வளவு துர் நாற்றம்.
Blue plains

வாஷிங்டன் டி.சி யில் உள்ள "Blue Plains Advanced Wastewater Treatment Plant (AWTP)" கழிவு நீர் சிகிச்சை மையத்தில், ஆரம்பம் மற்றும் இரண்டாவது சிகிச்சை தவிர "nitrification/denitrification, effluent filtration, chlorination/dechlorination and post aeration" என்ற சிகிச்சைகளால், கழிவு நீர் மேலும் வடிக்கட்ட படுகிறது. சென்னையில், சுமார் 23 எம் எல் டி இரண்டாவது சிகிச்சை பெற்ற கழிவு நீரை சென்னை பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடட் (Chennai Petroleum Corporation Limited) மற்றும் மட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் (Madras Fertilizers) கு விற்கப்படுகிறது. இதில் கிடைக்கும் வருமானமோ வருடத்திற்கு 5 கோடி ரூபாய்.

கழிவு நீரிலிருந்து எரி பொருள் கூட எடுக்கலாம் என ஒரு பதிவு இருக்கிறது. இவ்வாறு சாக்கடை கழிவு நீரை மேலும் சிகிச்சை படுத்தினால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்கம் கனாலில் துர் நாற்றம் வீசும் அழுக்கான நீர் ஓடாது. விஞ்ஞானத்தை மேலும் பயன் படுத்தி சென்னை நதிகளை சுத்தம் செய்தால், சிங்காரச் சென்னை நறு மணக்கும்.

படகு சவாரி, ஜெட் ஸ்கீயிங்("Jet Skiing" நீரிலே ஸ்கூட்டர் போல வாகனம் ஓட்டுவது), பாரா செய்லிங் ("Para Sailing" படகிலேயிருந்து, வானத்திலே பாராஷூட் மூலம் பறப்பது) போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடலாம் (ஏழை மக்கள் மீன் பிடித்து உண்ணலாம். நிம்மதியாக நீச்சல் அடிக்கலாம், அது போதுமே :)).

சென்னைவாசிகள் (என்னையும் சேர்த்து), சென்னைக்கு வருபவர் எல்லோரும், கூவத்தை மாசுபடுத்துவதில் பங்கு கொள்கிறோம். அரசாங்கம் தொழிற்சாலைகளின் கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவு நீரை, கூவத்தில் கலக்காமல் அதி நவீன சிகிச்சை மயங்களுக்கு முதலில் அனுப்பி, அதனால் வரும் உரம், எரி பொருள் ஆகிவற்றை எடுத்து, மீதம் நீரை ஆறுகளில் அனுப்பினால், கூவம் ஆறாக ஓடும், சாக்கடையாக அல்ல.

கூவம் அழகிய நதியாக ஓடும் பொன் நாள் எந்நாளோ ??

விமரிசனங்கள்

ஆகா,இந்த கனவு நிறைவேறும் நாள் வருமா?

வெகு வித்யாசமான பதிவு நாரியா.கனவை சொன்னதோடு நின்றுவிடாமல் அதை நனவாக்க வழிகளும் சொல்லி இருக்கிறீர்கள்.
 
நன்றி செல்வன்.
இந்த ஊரு போடோமாக் ஆற பார்க்கும் போது, இது மாதிரி நம்ம கூவத்திலே ஓடக்கூடாதா என்று ஏங்குவேன். சிங்காரமாக சென்னை ஆக வேண்டுமென்றால், கூவமும் நாற்றம் வீச வேண்டும் அல்லவா :)
 
செல்வன்,
"கனவு" வார்த்தை இரு முறை எழுதியதற்கு மிகவும் நன்றி. திருதிக்கொண்டேன்.
 
ஆஹா.. முன்பு கூவத்தில் படகு சவாரி இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். படகுத் துறைபோன்ற சில கட்டிட இடிபாடுகளை, சாலையில் இருந்தே பார்த்து ..அந்த கால சென்னையை நினைத்து நான் விட்ட பெருமூச்சு சென்னையை இன்னமும் உஷ்ணப்படுத்தியிருக்கும்..

இது நினைவாகும் நாட்கள் ஒரு தலைமுறை தூரத்தில் தான் இருக்கிறது என நினைக்கிறேன்

நல்ல பதிவு ..கல்கியின் கொள்ளிடம் நினைவுக்கு வந்துவிட்டது இதைப்படித்து.. :)


சுகா
 
வாங்க சுகா.
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி.

முன்பு ஒரு காலத்தில் கூவம் வளமாக ஓடிய ஆறு தான். நகர் வளர, ஆறு மாசுப்பற்றது. தமிழர்களால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை.

கூவத்தையும் அழகிய நதியாக ஓட வைப்பார்கள் என நம்புகிறேன்!
 
Thanks Geeths
 
நரியா..

http://photos1.blogger.com/blogger/1137/2662/1600/CentralRailwayStation1925.jpg

இந்தப் படம் ..உங்கள் கட்டுரைக்குப் பொறுத்தமானதில்லையா.. :)
 
அருமையான படம் அது.
ஆஹா என்ன தெளிவான நீர் கூவத்திலே.
மிக மிக நன்றி சுகா.
 
Post a Comment



<< Home

This page is powered by Blogger. Isn't yours?